’தொரட்டி’போல் நல்ல படங்கள் அமைந்தால் 10 வருடங்கள் வரை கூட பணம் வாங்காமலே இலவசமாகப் பாட்டு எழுதத் தயார்’என்று பிக்பாஸ் கமல் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரும் பிரபல பாடலாசிரியருமான சிநேகன் கூறினார்.

இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் தொரட்டி. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது. நேற்று முன் தினம் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய சிநேகன்,“நிறைய பேர்களுக்கு தொரட்டிப் பாடல்கள் பிடித்திருந்தது என்று சொன்னார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படக்குழுவின் அழைப்பை ஏற்று  வந்திருக்கும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. இன்னும் கிராமங்களில் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. இங்கு அதைச் சொல்லத்தான் ஆள்கள் இல்லை. இந்தப்படம் தான் எனக்கு சேரன் அமீர் படங்களுக்குப் பிறகு  பாடல்கள் எழுத  மனநிறைவாக இருந்த படம். ஊரில் எங்கப்பா நடந்து போகும்போது பின்னால் 40 ஆடுகள் ஒன்றாக நடந்து போகும். இன்றைக்கு 100 மனிதர்களை ஒன்றாக நிற்க வைப்பது கடினம். இந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்? 

சென்னையை அண்ணாந்து பர்க்கக் கூட முடியவில்லை. யாராவது காலை வாரி விடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. விவசாயத்தில் நூற்றுக்கணக்கான தொழில்கள் இருக்கிறது. மண்புழு எடுத்தல், களை பறித்தல், ஆடுமாடு மேய்த்தல் என  எத்தனையோ இருக்கின்றன.  மண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால் இன்னும் பத்து வருடம் கூட சம்பளம் வாங்காமல் பாட்டு எழுதலாம்.  இப்படிப்பட்ட பாடல்களுக்கான களம் கிடைப்பது  அரிது. இந்த மாதிரி படங்களின் தேவை இப்போது அதிகமாகி இருக்கிறது. ஒரு படைப்பாளன் தயாரிப்பாளாராக மாறுவது பெரிய சிரமம்.  இந்தப்படத்திற்காக என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வேன். நம் கிராமத்து வாழ்க்கையில் எத்தனையோ கதைகளும் வார்த்தைகளும், வாழ்க்கையும் கொட்டிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் படைப்பாக மாற்ற வேண்டும் தொரட்டியைப் போல. ” என்றார்.