இந்தியன் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ கமல், ஷங்கர் கூட்டணியின் ‘இந்தியன் 2’ படம் தொடர்ந்த சர்ச்சைகளுக்காக இந்திய அளவில் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருந்துகொண்டேயிருக்கிறது. லேட்டஸ்ட் சர்ச்சையாக படத்தயாரிப்பு நிறுவனமான லைகா,  ஷங்கர்,கமல் இருவருக்கும் நட்பு ரீதியாக ஒரு எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல்.

அரசியலுக்குப் போய் லைகா நிறுவனத்துக்கு முதலில் கமல் மட்டும் வில்லனாக மாறியிருந்த நிலையில், படத்தை அடுத்த கம்பெனிகளுக்கு நகர்த்த முயன்றவகையில் இயக்குநர் ஷங்கரோடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்நிலையில் ஷங்கருக்கு ஒரு செய்தி அனுப்பிய லைகா,...‘இந்தியன் 2’ வை வேறு நிறுவனத்துக்குக் கொண்டுபோவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அப்படிப்போகும் பட்சத்தில் கமல் எங்களது தயாரிப்பான ‘சபாஷ் நாயுடு’வுக்கு வாங்கிய அட்வான்ஸ் 25 கோடி ரூபாய், ‘இwதியன் 2’ படத்துக்கு இதுவரை செலவழிக்கப்பட்டுள்ள 65 கோடி ஆக மொத்தம் 90 கோடியை எங்களுக்கு செட்டில் பண்ணினால் ஒழிய வேறு யாரும் இப்படத்தைத் தயாரிக்கவிடமாட்டோம்’ என்று கறாராகக் கூறவே ஷங்கர் வெலவெலத்துப்போய்தான் லைகாவையே கண்டினியூ பண்ண ஆரம்பித்தார்.

ஆனால் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குக் காட்டும் ஆர்வத்தில் கால்வாசியைக் கூட ‘இந்தியன் 2’வுக்கு இன்று வரை காட்டவில்லை என்பதால் நடுவில் ஒரு தெலுங்குப் படமாவது பண்ணிவிட்டு திரும்பிவிடலாமா என்று ஷங்கர் மறுபடியும் மரமேற முற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கடுப்பான லைகா நிறுவனம் இருவருக்கும் பொருந்தும்படியாக ஒரு பொதுவான கடிதத்தில் ‘சார்மார்களே ரெண்டுபேருமே இந்தியன் 2 வுல முதல் கவனத்தை செலுத்தி அதை முடிச்சிட்டு அடுத்த வேலைகளைப் பத்தி யோசிங்க’ என்று தகவல் அனுப்பியிருக்கிறதாம்.