சுபாஸ்கரன் அல்லிராஜா  இலங்கையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர். இவர் லைக்கா மொபைல் குழும நிறுவனங்களின் தலைவர் ஆவார். இவரது  லைக்கா நிறுவனமானது தற்போது 17 நாடுகளில், சுமார் 12 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தனது தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வருகிறது

இதே போல் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவரும் வைத்தகா புரொடக்சன்ஸ் நிறுவனம் இவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும்.

இந்நிலையில் லைக்கா மொபைல் நிறுவனம், ஐரோப்பாவில் இயங்கும் பல தொலைபேசி நிறுவனங்களில் முதல் இடத்தை எட்டியுள்ளது.  மேலும் லைக்கா நிறுவன தலைவர் சுபாஷ்கரன், மனிதகுல மேம்பாட்டிற்காக, பல தொண்டுகளை ஆற்றிவருகிறார். 

இலங்கையின் வட கிழக்கு பகுதில் உள்ள தமிழர்களுக்கு குடியிருக்க நூற்றுக்கணக்கான வீடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடி நீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பது என்று எண்ணில் அடங்காத உதவிகளை செய்து வருகிறார் சுபாஷ்கரன். 

அவருடைய சமூக சேவையை பாராட்டி, மலேசிய ஏம்ய்ஸ்ட் பல்கலைக் கழகம் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. பட்டமளிப்பு விழாவில் பேசிய மலேஷிய  துணை முதல்வர், சுபாஷ்கரனை பார்த்து வியப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்திய சினிமா துறையிலும் லைக்கா நிறுவனம் கால்பதித்து, பல ஆண்டுகளாகிறது. தென்னிந்தியாவில் பல படங்களை தயாரித்து வருகிறது.  குறிப்பாக  ரஜினி நடிப்பில் உருவான 2.0, விரைவில் வெளிவர உள்ள ரஜினியின் தர்பார் உள்பட பல படங்களை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை மிகப் பிரமாண்மாக லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

அதே நேரத்தில் இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே குடும்பத்தினருக்கு சுபாஷ்கரன் மிகவும் நெருக்கமானவர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து நடிகர் விஜய்  நடித்த  கத்தி திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் அதற்கு தமிழக கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அந்த எதிர்ப்புகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போனது குறிப்பிடத்தக்கது.