ஒரு குத்துமதிப்பான நடிகர் பட்டாளத்தோடு அடுத்து இயக்கவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ தொடர்பாக இயக்குநர் மணிரத்னம் கொடுத்த பட்ஜெட்டைப் பார்த்து லைகா நிறுவனத் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அலறி அடித்து ஓடிவிட்டதாக தகவல்கள் வருகின்றன.

சுமார் 4 மாதங்களாக, மணிரத்னம் இயக்கவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து நிறைய தகவல்கள், குறிப்பாக அப்படத்தில் பங்கு பெரும் நட்சத்திரங்கள் குறித்து வந்துகொண்டே இருக்கின்றன. மணிரத்னம் தரப்பில் ஒரு பிட்டுச் செய்தி கூட அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில்  அமிதாப் பச்சன் தொடங்கி சிம்பு வரை சுமார் 20 நட்சத்திரங்கள் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஓரளவு பேசி முடிக்கப்பட்ட ஒரு உத்தேச நட்சத்திரப் பட்டியலுடன் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ பட்ஜெட்டை லைகா நிறுவனத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் அந்த பட்ஜெட் பாகுபலி 2’ பட்ஜெட்டை விட அதிகமாக இருந்ததைக் கண்டு லைகா நிறுவனம் சற்றே ஸ்தம்பித்து விட்டதாகவும் தகவல்.

ஏற்கனவே ’இம்சை அரசன் 24’ டிராப், ‘சபாஷ் நாயுடு’ டிராப்போ டிராப், ‘இந்தியன் 2’ ஏறத்தாழ டிராப் என்ற நிலையில் படுபயங்கர புயலில் சிக்கித் தவிக்கும் லைகா நிறுவனம் ‘இது எங்களுக்கு கட்டுபடியாகாது சாமி’ என்று கையைத் தூக்கிவிட, மும்பையிலுள்ள ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் உட்பட பெரிய கார்பரேட் முதலைகளுக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறாராம் பொன்னியின் ரத்னம்.