இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நேற்று வெளியான 'தர்பார்' திரைப்படத்தில், சிறையில் உள்ள சசிகலாவை விமர்சிக்கும் விதத்தில் வசனம் இருந்தது, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அந்த வசனத்தை நீக்க தயார் என, 'தர்பார்' படத்தை தயாரித்த லைகா நிறுவனம் கூறியுள்ளது.

'தர்பார்' படத்தில், ஆயுள் தண்டனை கைதி ஒருவரை சிறைக்கு வெளியே அனுப்பிவிட்டு அவனுக்கு பதிலாக வேறு ஒருவனை சிறையில் வைத்திருப்பார்கள். இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தின் போது சவுத்துல கூட பெண்மணி சிறையில் இருந்து வெளியே போய்ட்டு வர்றதாக கேள்விப்பட்டேன் என ஒரு அதிகாரி கூறுவார். 

இதே போல காசு மட்டும் இருந்தால் போதும் சிறையில் ஷாப்பிங்கே போகலாம் என டயலாக் இருக்கும். இந்த இரண்டு டயலாக்குமே சசிகலாவை குறி வைதே இந்த படத்தில் புகுத்தியது போல் இருந்தது, திரையுலக வட்டாரத்தில் மட்டும்  அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு, சசிகலா ஷாப்பிங் சென்றுவிட்டு சிறைக்கு திரும்புவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல் சிறையில் சசிகலா சகல வசதிகளுடன் இருப்பதாக கர்நாடக சிறைத்துறை ஐஜி ரூபா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசனத்திற்கு, தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பியதால் தற்போது இந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்க தயார் என தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகார பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.