கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘லப்பர் பந்து’. இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும், அதில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘லப்பர் பந்து’
2024-ம் ஆண்டு இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ‘லப்பர் பந்து’. இந்த படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, பால சரவணன், காளி வெங்கட், தேவதர்ஷினி என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.44 கோடிக்கு மேல் வசூலை குவித்திருந்ததாக கூறப்படுகிறது.

ஹிந்தியில் ரீமேக் ஆகிறதா ‘லப்பர் பந்து’?
ஓடிடி தளத்தில் வெளியான பின்பு கூட படத்திற்கான வரவேற்பு குறையாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழில் வெளியாகும் பல நல்ல படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘லப்பர் பந்து’ படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் தமிழ் படங்களில் பெரும்பாலும் அக்ஷய் குமார் நடித்திருப்பார். ஆனால் ‘லப்பர் பந்து’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்வாசிகா கொடுத்த அப்டேட்
அட்டகத்தி தினேஷின் கெத்து கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ‘லப்பர் பந்து’ படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஸ்வாசிகா, ஷாருக்கான் இந்த படத்தை பார்த்து ரசித்ததாகவும், ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்புவதாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்வாசிகா தான் நடிக்க வேண்டும் என ஷாருக்கான் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.
அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன ‘லப்பர் பந்து’ நடிகர்கள்
இந்த படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து அடுத்து என்ன படத்தை இயக்க இருக்கிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அவர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் இப்படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் ‘ஓ மணப் பெண்ணே’, ‘டீசல்’ என்ற இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்த வருகிறார். அட்டகத்தி தினேஷ் ‘கருப்பு பல்சர்’ என்னும் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்த பின்னர் ஸ்வாசிகாவுக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. சூரியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாமன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் ‘சூர்யா 45’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
