திரையுலகில் ஒரு நட்புக் கூட்டணி தொடர்ந்து நீடிப்பது என்பது ஓர் ஆச்சரியம். அப்படி ஒரு ஆச்சரியம்தான் 

இயக்குநர் வெங்கட்பிரபு, வைபவ், நிதின் சத்யா ஆகியோரின் நட்பு கூட்டணி. சென்னை 600028ல் தொடங்கிய இவர்களின் நட்பு, இன்று, ஒருவர் படம் தயாரிக்க மற்ற இருவர் கைகொடுப்பது என்பது வரை நீடிக்கிறது. 

தெளிவாக கூற வேண்டும் என்றால், சில படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்த நிதின் சத்யா, கடந்த ஆண்டு ஜருகண்டி படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். வெங்கட்பிரபு நட்பு கூட்டணியின் ஒருவரான ஜெய் ஹீரோவாக நடித்த இந்தப்படம், திரையரங்குகளில் சுமாராகவே ஓடியது. எனினும் மனம் தளராத நிதின் சத்யா, தனது 2-வது படத்தை தயாரித்து வருகிறார். 

 

இந்த முறை, நிதின் சத்யாவுக்கு  கைகொடுக்கும் வகையில் மற்றொரு நண்பர் வைபவ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்குநராக ப்ரமோமஷன் ஆகியிருக்கும் இந்தப் படத்தில், வைபவுக்கு ஜோடியாக சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் நடிக்கிறார். 

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அவர் அறிமுகமாகும் முதல் படம் இது. ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக இயக்குநரும் நடிகருமான வெங்கட்பிரபு முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார். 

அரோல் கரோலி இசையமைக்கிறார். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப்படத்துக்கு லாக்கப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் தனுஷ் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, லாக்கப் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள லாக்கப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.