உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடிப்பில் 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது, இந்தத்திரைப்படத்தை எழில் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் நாயகி ரெஜினாவின் தந்தையாக நடித்திருக்கும் பிரபல நடிகர் லிவிங்ஸ்டன், தற்போதைய திரையரங்கு நிலவரம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:

'நான் எல்லா படங்களையும் தியேட்டரில் சென்றுதான் பார்ப்பேன். இதுவரை எந்த படத்தையும் டிவிடியில் பார்த்ததில்லை. 

ஆனால் அதே நேரத்தில் தியேட்டருக்கு சென்று குடும்பத்துடன் ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் ரூ.1500 செலவு ஆகிறது. இது நடுத்தர வர்க்கத்தினருக்கு சாத்தியம் இல்லை ? 

தியேட்டரில் ஒரு பப்ஸ் ரூ.80க்கும், ஒரு சிறிய தண்ணீர் பாட்டில் ரூ.50க்கும் விற்பனை செய்கின்றனர்.இப்படி இருந்தால் நடுத்தர வர்க்க மக்கள் எப்படி தியேட்டருக்கு வருவார்கள்?

எனவே ரூ.400 அல்லது ரூ.500க்குள் ஒரு குடும்பம் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் அனைவருமே தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள். 

அனைத்து படங்களும் 1970 ,80,90 ஆம் ஆண்டுகளில் ஓடியது போன்று 50 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடும்' என்று கூறினார்.

திரையரங்கிற்கு வந்து படம் பாருங்கள் என்று கூறும் பல பிரபலங்கள், நடுத்தர வர்கத்தின் நிலையை புரிந்து கொள்ளாதபோது, முதல் முறையாக நிலையறிந்து பேசிய லிவிங்ஸ்டனின் பேச்சும் நியாயம்தானே...