சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருது தொடர்ந்து சர்ச்சையாகிவரும் நிலையில் அவ்விருதை நியாயமாக கமலின் மூத்த சகோதரர் சாருஹாசனுக்குக் கொடுத்திருக்கவேண்டும் என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஆதங்கப்பட்டுள்ளார்.

சாருஹாசன், பல்லவி,ஜனகராஜ் ஆகியோர் நடிப்பில் ‘தாதா 87’என்ற படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ. கடந்த ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை எனினும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் கொடுக்கப்பட்டது நியாயமானதில்லை. கமலுக்குத்தான் அந்த விருது கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று பலரும் ஆதங்கப்பட்டு வரும் நிலையில் விஜய் ஸ்ரீயோ அவ்விருதுக்கு உண்மையில் தகுதியானவர் சாருஹாசன்தான் என்று ஜெர்க் கொடுக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...1975 இல் தமிழ் சினிமாவில் அறிமுகம்ஆன சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் தொடர்ந்து சினிமா துறையில் நடித்து வருகிறார். நேற்று அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது மத்திய அரசுஅறிவித்ததில் மகிழ்ச்சி.

இந்தத்தருணத்தில், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் அன்பான வேண்டுகோள்’உதிரிப்பூக்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான திரு சாருஹாசன் அவர்கள் தனது முதுமையைக் காரணம் காட்டாமல் 90 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் இந்திய நடிகர்களில் வயதான நடிகர். 1987ஆம் ஆண்டில் கிரிஷ் கசரவல்லி இயக்கிய ” தபெரனா கதெ ” என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான “தேசிய விருது ” பெற்றார்.மேலும் சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட விருது பெற்றுள்ளார்.

உலக அளவில் பார்க்கும் போதும் 90 வயதில் தற்சமயம் இவர் தான் நடித்து வருகிறார். இந்திய நடிகரின் இந்த சாதனையை உலகம் அறியச் செய்ய வேண்டும். சாருஹாசன் அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிட வேண்டும்என்பது என்னைப்போன்ற சினிமா ஆர்வலர்களின் அன்பான வேண்டுகோள் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.