மகத்தான கலைஞன் டி.எஸ்.பாலையாவின் பிறந்தநாள் இன்று 💐தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், காமெடியன், குணச்சித்திரம் என்று எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர் டி.எஸ்.பாலையா. தனக்கென்று தனி பாணியை வகுத்துக் கொண்டு தன்னிகரில்லா கலைஞராக வலம் வந்த பாலையா, 36 ஆண்டுகளாக அனைத்து தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்த அபூர்வ நடிகர். வில்லனாக அறிமுகமாகி மக்கள் மனதில் ஹீரோவாக ஜொலித்த வெகுசிலரில் ஒருவர்.

சிவாஜிகணேசன், பத்மினி நடிப்பில் வெளிவந்த தில்லானா மோகனம்பாள் திரைப்படத்தையும் அந்த படத்தில் தவில் வித்வான் கதாபாத்திரத்தில் நடித்த டி.எஸ்.பாலையாவையும் அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. ரயிலில் அவர் அடிக்கும் கூத்துகளும், அதற்கு சிவாஜி முறைக்கும் போதெல்லாம் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்வதுமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார் பாலையா.

1914-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை கிராமத்தில் பிறந்த பாலையாவுக்கு, சர்க்கஸ் கலைஞனாக வேண்டும் என்கிற ஆசை இருந்ததால், அப்பா அம்மாவிடம் கூட சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி பாலமோஹன சபா எனும் நாடக குழுவில் சேர்ந்தார்.அங்கு பாலையாவுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த கந்தசாமி முதலியாருக்கு, பாலையாவின் நடிப்பு பிடித்துப் போக, அவர் வசனம் எழுதிய சதி லீலாவதி படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அந்த படத்தில் பாலையாவுடன் சேர்ந்து எம்.ஜி.அர், கே.ஏ.தங்கவேலு, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோரும் அறிமுகமாயினர். அந்த படத்தில் அறிமுகமான அனைவரும் எதிர்காலத்தில் மிகச்சிறந்த நடிகர்களாக தமிழ் சமூகத்தில் தடம் பதித்தார்கள்.

மணமகள் படத்தில் பாலையாவின் அபாரமான நடிப்பைப் பாராட்டி, தனது விலை உயர்ந்த காரையே அவருக்குப் பரிசளித்தாராம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இயக்குனர் ஸ்ரீதர் தயாரித்த முழு நீள நகைச்சுவை படமான ‘காதலிக்க நேரமில்லை’ படம் பாலையாவின் படங்களில் மைல்கல் என்று சொல்லலாம்..இரட்டைக் குரலில் பேசி அசத்துவதில் எம்.ஆர். ராதாவுக்கு நிகரான பாலையா இந்த யுக்தியை காதலிக்க நேரமில்லை படத்திலும் கையாண்டார். இன்றைக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் பெயரைச் சொன்னதும் உடனே நினைவிற்கு வருவது நாகேஷ் கூறும் மர்மக் கதையை கேட்டு பாலையா பயந்து நடுங்கும் காட்சிதான்.

தூக்கு தூக்கி’ படத்தில் சேட்ஜியாக வந்து நம்மள், நிம்மல் என வட இந்தியர்கள் தமிழ் பேசி அட்டகாசமாக நடித்திருந்தார். இன்று வரை தமிழ்ப் படங்களில் சேட் வேடத்தில் நடிப்பவர்கள் பாலையாவின் பாணியைத்தான் பின்பற்றுகிறார்கள்.பாகவதர், சின்னப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜி என இருதலைமுறை சூப்பர்ஸ்டார்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பாலையா, 1972ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன் கூறிய வார்த்தையை போன்று, இன்றுவரை, பாலையாவின் இடத்தை எவராலும் நிரப்ப முடியவில்லை என்பதே நிதர்சனம்.
முகநூலில்...Kanchanai Filmsociety