நடிகர் ராகவா லாரன்ஸ், பல ஆண்டுகளாக தன்னுடைய அம்மா பெயரில்  நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பல குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மீண்டும் நடத்தப்பட வேண்டும் என இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் மாபெரும் போராட்டத்தில் இறங்கினார் இந்த அறவழி போராட்டம் பொதுமக்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு கூடி வருகிறது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன் மெரினாவில் போராட்டம் நடத்த முயன்ற சில மாணவர்களை போலீசார் கைது செய்து போராட்டம் நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், விவசாயம் பாதிக்கப்பட்டதால்   உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நிதி உதவி வழங்கினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த லாரன்ஸ்... விவசாயம் என்பது நம் நாட்டின் முதுகெலும்பு என்றும் ஒருபோது நாம் விவசாயிகளை  மறந்து விடாமல் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறினார்.

மேலும் தன்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்வேன், என்றும் தற்போது தங்களுடைய வாழ்வாதாரத்தை மீட்க போராடி வரும், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் ஏற்காவிடில்  மீண்டும் மெரினாவில் புரட்சி போராட்டம் வெடிக்கும் என அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.