2019ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் காலமான பிரபல ஒளிப்பதிவாளர் எம்.ஜே.ராதாகிருஷ்ணன் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்று கேரள மக்களின் கண்களைக் குளமாக்கியுள்ளார்.

ஒளிப்பதிவுக்காக ஏழு மாநில விருதுகள், மூன்று சர்வதேச விருதுகள் பெற்ற கேரளாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் எம்.ஜே.ராதாகிருஷ்ணன்  கடந்த மாதம் ஜூலை 11ம் தேதியன்று மறைந்தார்.

புகைப்படங்களின் மீது அதீத காதல் கொண்ட எம்.ஜே.ராதாகிருஷ்ணன் கேரளத் திரையுலகில் புகைப்படக்காரராக அறிமுகமானார். அதன்பின் தேசிய விருது பெற்ற இயக்குநர் ஷாஜி என் கரூனால் ஒளிப்பதிவாளராகப் பரிணாமம் அடைந்தார். அதன்பின் முப்பது வருடங்களுக்கும் மேல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய இவர் தேஷாதனம், கருனம், நாலு பெண்ணுகள், திரைக்கதா போன்ற முக்கியமான படங்களில் பணியாற்றியுள்ளார்.

இயற்கையான ஒளியமைப்புக்கும், குறைந்த ஒளியில் காட்சிகளை வடிவமைப்பதற்கும் பெயர் பெற்றவர் ராதாகிருஷ்ணன். இயற்கையான சூரிய வெளிச்சத்தைத் தனது அனுபவத்தின் மூலம் விரைவில் கணிக்கக்கூடிய நேர்த்தி பெற்ற ஒளிக்கலைஞன் எனப் பெயர் பெற்றவர். தனது பயணத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், ஷாஜி என் கரூன், முரளி நாயர், ஜெயராஜ், டி.வி.சந்திரன், பிஜு, ரெஞ்சித் போன்ற மலையாள உலகின் முக்கியமான ஆளுமைகளுடன் பணியாற்றியுள்ளார். அதே சமயம் இளைஞர்கள், சுயாதீன முயற்சி செய்யும் படைப்பாளிகள் ஆகியோருடன் தொடர்ந்து பயணித்தும் வந்துள்ளார். லீனா மணிமேகலை இயக்கி 2011ஆம் ஆண்டு திரைப்பட விழாக்களில் பங்கு பெற்ற ’செங்கடல்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவரும் இவரே.

1999ஆம் ஆண்டு மரண சிம்ஹாசனம் படத்துக்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் கேமரா விருதை வென்றுள்ளார். மேலும், ஏழு கேரள மாநில விருதுகள், மூன்று சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். 75க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், ஆவணப் படங்களில் பங்களித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன்.இந்த நிலையில், ஜூலை 11 அன்று மாரடைப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். எம்.ஜே.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு கேரள திரையுலகமே மனம் கலங்கி அஞ்சலி செலுத்திய நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்திருந்தார்.

தற்போது, மறைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில்,  கடந்த ஆண்டு ரிலீஸாகி கேரளாவில் விமர்சகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட ‘ஒழு’படத்துக்காக ராதாகிருஷ்ணன் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றிருப்பது கேரள திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.