பிரபலமானவர்கள் உடல் நலம் குன்றி சிகிச்சை எடுத்து வரும்போது, அவசரமாக செய்திகள் தருகிறேன் பேர்வழி என்கிற பெயரில் ‘மரண வதந்திகளைப் பரப்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இக்கொடியவர்கள் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் குறித்தும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தவறான வதந்திகளைப் பரப்பி வரும் நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கண்டித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

90வயதான பிரபல இந்தி பின்னணி பாடகி லதா மங்கேஸ்கருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த 11-ந்தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

இந்த நிலையில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,... இசைத்துறையில் சாதனை படைத்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்த வதந்திகள் முழுவதும் தவறு. அந்த செய்திகள் அனைத்தும் கொடுமையாக உள்ளன. சரியான விவரம் அறியாதவர்கள். தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். நான் தனிப்பட்ட முறையில் அவரது உடல்நலம் குறித்து அறிந்து கொண்டேன். அவர் உடல்நிலை தேறி வருகிறார். விரைவில் நலம் அடைவார். அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். யாரோ, தங்களது வலைதள பக்கங்களில் பதிவு செய்கிறார்கள் என்பதற்காக அதை பரப்ப வேண்டாம் என்று மிக உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார் எஸ்.பி.பி.

லதா மங்கேஷ்கர் குடும்பத்தினரும் தொடர்ந்து பரவி வரும் வதந்திகளுக்கு எதிராக தினமும் மறுப்புச் செய்திகள் கொடுத்தவண்ணம் உள்ளனர். இது தொடர்பாக சற்றுமுன்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,...இன்று லதாஜியின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் வந்துள்ளனர். அவரது உடல்நிலை சீராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.