சுஷ்மிதா சென்-ஐ டேட் செய்யும் லலித் மோடி… வைரலாக பரவும் டிவிட்டர் பதிவு!!
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி ரூ.470 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக பிசிசிஐ புகார் அளித்தது. அதன் அடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில், லலித் மோடியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்க மும்பை நிதி மோசடி தொடர்பான நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பலமுறை மோடிக்கு, அமலாக்கத்துறை நினைவூட்டல் கடிதங்களை எழுதி, விசாரணைக்கு ஆஜராக கேட்டுக்கொண்டது.
கிரிக்கெட் சூதாட்டம், ஐபிஎல் முறைகேடு உள்ளிட்ட புகார்களில் குற்றம்சாட்டப்பட்ட லலித் மோடி, இந்தியாவில் தனக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி வழக்கு விசாரணையை தவிர்த்ததோடு இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் தஞ்சமடைந்தார். இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்தது, பண முறைகேட்டில் ஈடுபட்டது என்று இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த நிலையில் லலித் மோடி, பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியின் முதல் தலைவராகவும், ஆணையராகவும் இருந்த லலித் மோடி, தனது டிவிட்டரில், சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து, அதில் எனது பெட்டர்ஹாப் என்றும் இறுதியாக புதிய வாழ்க்கை தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் டேட்டிங் மட்டுமே. ஆனால் அதுவும் ஒரு நாள் நடக்கும் என்று லலித் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் ஆக கடந்த 1994 இல் மகுடம் சூடிய சுஷ்மிதா சென், 1996ல் தஸ்தக் என்ற இந்தி படத்தில் அறிமுகமானார். பிவி நம்பர் ஒன், மைனே பியார் கியூன் கியா, மைன் ஹூன் நா ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுஷ்மிதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள். இறுதியாக ஆர்யா 2 என்ற வெப் சீரியலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.