lakshmi short film issue
யூடியூப் தளத்தில் சமீபத்தில் வெளியாகி பலரது விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும் குறும்படம் லட்சுமி. இந்தக் குறும்படத்தை சர்ஜுன் கேஎம் இயக்கியுள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது இந்தக் குறும்படம். இது தமிழ்ப் பெண்களின் கலாச்சாரத்தை அவமதிப்பது போல் எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

வேலைச் சுமை காரணமாக, கணவனிடம் இருந்து பாசமும் அன்பும் கிடைக்காமல் வாழ்வில் சலிப்பு ஏற்படுகிறது இந்தப் பெண்ணுக்கு. பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் வேலை செய்யும் லக்ஷ்மி, சில நாட்கள் மின்சார ரயிலில் சென்று வரும் போது ஒரு இளைஞனைப் பார்க்கிறார் . முதல் நாள் பார்த்துச் சிரிக்கிறாள். மறுநால் ஒரு சந்தர்ப்ப வசத்தால், அவனுடன் அவன் வீட்டுக்குச் செல்கிறாள். அதே தினத்தில் அவனுடன் இணைகிறாள். பிறகு தன் சகஜ வாழ்க்கையைத் தொடர்கிறாள்... இது தான் இந்தக் குறும் படத்தின் கதை.
இதுபோல அமைந்த கதை சரியா, தவறா என்றொரு விவாதம் சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வரும் வேளையில் இந்தக் குறும்படத்தில் நடித்த லட்சுமி ப்ரியா சந்திரமெளலி தன்னுடைய நடிப்பால் அனைவருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளார்.fgfgdf.jpg)
ஏற்கெனவே சில படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள இவர் ஆங்கில நாடகங்களிலும், 2010ல் வெளிவந்த முன்தினம் பார்த்தேனே மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். சுட்ட கதை படத்தில் கதாநாயகியாக நடித்தார். தர்மயுத்தம் என்கிற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். 2015-ல் வெளிவந்த மாயா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்த லஷ்மி ப்ரியா, நவம்பர் 30 அன்று வெளிவரவுள்ள ரிச்சி படத்திலும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவரின் நடிப்பு இயல்பாக உள்ளது என்று பலரும் பாராட்டி வந்தாலும், தமிழ்க் கலாச்சாரத்தை சீர் குலைப்பதாக இந்தக் குறும்படம் உள்ளது என்றும், இதில் பாரதியாரின் பெயரும் கவிதையும் வேறு இடம்பெறுவதை வன்மையாகக் கண்டிப்பதாக பலர் தங்களுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
