கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபஸ்டியன் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம், மலையாளத்தில் மட்டுமே வெளியான போதும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. 

இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சாய் பல்லவி, தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பிரேமம் படத்திற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித புதுப்பட அறிவிப்பையும் வெளியிடாத அல்போன்ஸ் புத்திரன் இன்று தனது புதுப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தற்போது அல்போன்ஸ் புத்திரன் இயக்க உள்ள படத்திற்கு ‘பாட்டு' என்ற பெயர் வைத்துள்ளார். மேலும், இசையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளரும் அல்போன்ஸ் புத்திரன் தானாம். மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான ஃபகத் ஃபாசில் ஹீரோவாக நடிக்க உள்ள இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மலையாளத்தை தாண்டி தமிழிலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.