விஜய்யுடன் பிகில் படத்தை தொடர்ந்து நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் தர்பார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி, நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில், நயன்தாரா அம்மனாக நடிக்க உள்ளார். இந்தப்படத்தை சரவணன் இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. பக்தி படமான இதில் நடிப்பதற்காக 8 ஆண்டுகளுக்குப் பிறகு நயன்தாரா விரதம் இருந்து வருவதாக தகவல்கள் பரவின. 

ஏற்கெனவே ஆர்.ஜே. பாலாஜியுடன் நானும் ரவுடி தான், வேலைக்காரன் போன்ற படங்களில் நடித்துள்ள நயன்தாரா, கதையின் முக்கியத்துவம் கருதியே மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் படத்திற்கான பூஜை வெகு விமரிசையாக போடப்பட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, இயக்குநர் சரவணன் உள்ளிட்டோர் பூஜையில் பங்கேற்றனர். 

படத்தின் முக்கிய கதாபாத்திரமான நயன்தாரா மட்டும் பூஜையில் மிஸ் ஆகியுள்ளார். முன்னணி ஹீரோயினாக இருந்த நயன்தாரா, எப்போது லேடி சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்தாரோ அன்றிலிருந்து தனக்கு என சில கொள்கைகளை ஃபாலோ செய்கிறார்.  ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளில் நடிக்க மாட்டேன், பட புரோமோஷனில் பங்கேற்கமாட்டேன் என அடம்பிடிக்கும் நயன்தாரா, அதில் முக்கியமாக பட பூஜைகளில் கலந்துகொள்ளவே மாட்டேன் என்பதை கடுமையாக பின்பற்றி வருகிறார். 

அதன்படி தான் மூக்குத்தி அம்மன் பட பூஜையிலும் நயன் தாரா பங்கேற்கவில்லை. இது ஒன்றும் நயன்தாராவிற்கு முதல் முறையில்லை. ஏற்கெனவே விஜய்யின் பிகில், ரஜினிகாந்தின் தர்பார் பட பூஜைகளில் கூட நயன்தாரா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.