ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் "தர்பார்". இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சமீபத்தில் "தர்பார்" படத்தில் இருந்து வெளியான "சும்மா கிழி" பாடல் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. இசையமைப்பாளர் அனிரூத் ஐயப்பன் பாடலைக் காப்பியடித்து டியூன் போட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையிலும், யு-டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. இந்நிலையில் "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது. 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் அனிரூத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள அந்த விழாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  பங்கேற்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். தனக்கென தனிப்பட்ட கொள்கைகளை கொண்டுள்ள நயன்தாரா படபூஜைகள் மற்றும் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.

சமீபத்தில் "பிகில்" படத்தின் பூஜை மற்றும் ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் கலந்து கொள்ளாமல் விஜய் முகத்தில் கரியை பூசினார் நயன்தாரா. இதேபோன்று "தர்பார்" பட பூஜையிலும் பங்கேற்காமல் தவிர்த்தது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கொதிப்படையச் செய்தது. இந்நிலையில் எப்படியாவது வந்திடுங்க மேடம் என ஏ.ஆர்.முருகதாஸ் கோரிக்கை வைத்தும் நயன்தாரா "தர்பார்" இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தளபதி ரசிகர்களுடன் சேர்ந்து சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் கோவத்திற்கும் ஆளாகியுள்ளார் நயன்.