kuthusi film create awarness for agriculture
வத்திகுச்சி திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் ஜெயபாலன் நடித்திருக்கும் படம் "குத்தூசி". இப்படத்தில் அந்தோனி எனும் வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கிறார். ஸ்ரீ லக்ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் M.தியாகராஜன் தயாரித்துள்ளார். படத்தின் இயக்குனர் சிவசக்தி.
இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த குத்தூசி திரைப்படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதைக் கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.
நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என்று ஒவ்வொரு விவாசாயியும் நினைத்ததால்தான் அவர்கள் பிள்ளைகளுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லாமல் செய்துவிட்டார்கள். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான் என உலக நாடுகள் அறியும். நம் நாட்டின் பாரம்பரிய விவசாயத்தை எப்படியாவது அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார் என்பதே கதை. தற்போது இயற்கை விவசாயம் என்பது அரிதாவிட்டது. இதனை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதையும் கூறியிருக்கிறார் இயக்குனர் சிவசக்தி.
இப்படத்தின் படப்பிடிப்பு கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலைப் பகுதியிலும் சென்னையிலும் என மொத்தம் 54 நாட்கள் நடத்தியிருக்கிறார்கள்.
காதல், ஆக்ஷன், எமோஷன் என கமர்ஷியலாகவும் மக்களுக்குப் பிடிக்கும் வகையிலும் குத்தூசி உருவாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு.
