அப்பா மற்றும் அண்ணன்களின் அட்ராசிட்டியால் தமிழ் சினிமா  ரசிகர்கள் மிகவும் அப் செட் ஆகியுள்ளதால் அவர்களை மேலும் டார்ச்சர் செய்யாமல் தான் இனி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே இசையமைக்கவிருப்பதாகவும், தமிழ்ப் படங்கள் இருக்கும் பக்கம் தப்பித் தவறிக் கூட தலைவைத்துப் படுக்கமாட்டேன் என்றும் டி. ஆரின் இரண்டாவது புத்திரர் குறளரசன் ஒரு இனிப்பான செய்தி அனுப்பியுள்ளார்.

சிம்பு-நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "இது நம்ம ஆளு"படத்தின் மூலம் இளம் இசையமைப்பாளராக தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமான அஷ்டாவதானி டி.ராஜேந்தரின் இளையமகன் குறளரசன்(K T R)அதன் பிறகு தமிழ்ப்படங்களின் மேல் இரக்கம் கொண்டு இசையமைக்காமல் இருந்தார். பின்னர் தனது இசை மேதமையை வெளிப்படுத்த  ஹாலிவுட்,பாலிவுட்டிலும் அடிஎடுத்து வைத்திருக்கிறார்.5பாடல்கள் அடங்கிய ஆங்கில பாடல் தொகுப்பினை ஹாலிவுட் பாடகர்களை பாடச்செய்து நியூயார்க் நகரில் சமீபத்தில் வெளியிட்டார். அப்பாடல்களைக் கேட்டு ஹாலிவுட்காரர்கள் தூக்கமிழந்தனர்.

அதையொட்டி உற்சாகமான அவர், தற்போது 30க்கும் மேற்பட்ட ஹிந்தி பாடல்களை ஆல்பமாக வெளியிட்டுள்ளார், இந்த பாடல்களை கேட்ட பெரிய ஹிந்தி பட நிறுவனம் அவர்கள்தயாரிக்கும் படத்திற்கு இவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகின்றனர்.இவரது இசையமைப்பில் வெளிவரும் 4 பாடல்கள் அடுத்தமாதம் நடைபெறும் பிரம்மாண்டமான இசை வெளியீட்டுவிழாவில் வெளியிடப்படவும் இருக்கிறது. கூடிய விரைவில் தமிழகம் தவிர்த்து, உலகம் முழுவதும் இவரதுஇசை ஒலிக்க இருக்கிறது.

இளையாராஜாவும், ரஹ்மானும் ஒன்றாக இணைந்து வந்து கெஞ்சிக் கேட்டாலும் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம் குறளரசன்.