இருமுறை தேசிய விருதுகளையும் பலமுறை ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றுள்ள தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவருமான வம்சி கிருஷ்ணா 21 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பக்திப் பரவசத்துடன் பகிர்ந்துள்ளார் வம்சி.

’95ல் ‘குலாபி’என்ற சூப்பர் ஹிட் படத்துடன் அறிமுகமாகி இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளவர் வம்சி. அவர் தனது இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது நடிகை ரம்யா கிருஷ்ணனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு வம்சி கிருஷ்ணா ஆனார். 1988 ம் ஆண்டு நடிகர் பிரகாஷ்ராஜை பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு இவர் இயக்கிய தமிழ்,தெலுங்குப் படமான ‘அந்தப்புரம்’ சூப்பர் ஹிட் அடித்தது. அப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் மராத்திப் படமான ‘நட்சாம்ராட்’என்ற படத்தை தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக இயக்கவிருக்கும் கிருஷ்ண வம்சி 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இளையராஜாவை நாடி வந்திருக்கிறார். இச்செய்தியை சில மணி நேரங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட அவர்,...பக்தனுக்கு மீண்டும் இசைக் கடவுளின் தரிசனம். அவருடன் ‘ரங்க மார்த்தாண்டா’படத்துக்காக மீண்டும் பணி புரிவது பரவசமான அனுபவம்...போன்ற வாசகங்களுடன் தொடர்ந்து ட்விட்டி வருகிறார். இப்படத்தில் அவரது ஆஸ்தான நடிகர் பிரகாஷ் ராஜுடன் அவரது மனைவி ரம்யா கிருஷ்ணனும் நடிக்கிறார்.