கடந்த சில தினங்களாக இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ளாத சினிமா பிரபலங்களுக்கு கமல் வலைவீசத் துவங்கியுள்ள நிலையில் பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா சற்றுமுன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பாராளுமன்றத்தேர்தலில் தனது கட்சியில் இல்லாதவர்களும் கூட வேட்புமனு செய்யலாம் என்று அறிவித்திருந்த கமல், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே தன்னிடம் ஏற்கனவே இணைந்துள்ள சிநேகன், கமீலா நாசர், ஸ்ரீப்ரியா ஆகியோர் மூலம் கட்சியில் சினிமா பிரபலங்களை இணைக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அந்த வலைவீசுதலில் சிக்கிய நடிகை கோவை சரளா, மகளிர்க்கு எப்போதுமே முக்கியத்துவம் தரும் கமலின் கட்சியில் இன்று மார்ச் 8 மகளிர் தினத்தன்று தன்னை இணைத்துக்கொண்டார். ஆச்சி மனோரமாவுக்கு அடுத்தபடியாக மிக நீண்ட காலம் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகையாகக் கொடி நாட்டிவரும் கோவை சரளாவை ‘சதி லீலாவதி’ படத்தில் தனது ஹீரோயினாக்கி அழகுபார்த்தவர் கமல் என்பது இங்கு சாதாரண குறிப்பிடத்தக்கது அல்ல அடிக்கோடிட்டு குறிப்பிடத்தக்கது.