அரசியல் ரஜினிகாந்துக்கு எதிராகதான் எட்டு திசைகளில் இருந்து படை திரட்டி நின்று எதிர்க்கிறார்கள்! என்றால், இப்போது சினிமா ரஜினிக்கும் நெருக்கடி தாறுமாறாக அதிகரிக்க துவங்கியுள்ளது ஷாக்காகி இருக்கிறது. அதுவும் இந்த எதிர்ப்பானது கோலிவுட்டில் இருந்தே வெடித்திருப்பதுதான் ஹாட் ஹைலைட். 

ரஜினிக்கு எதிரான அரசியல்வாதிகளின் அரசியல் மூவ்களை தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இப்போது சினிமா துறையில் இருந்தே அவருக்கு எதிராக ஒரு புது பஞ்சாயத்து முளைத்திருக்கிறது. ஒரு கோணத்தில் பார்க்கப்போனால் அது சரி என்றே படுகிறது. 

அதாவது தமிழ் சினிமாக்களின் ஷூட்டிங் நடக்கும் போது தமிழ் சினிமா யூனியனில் உள்ள ஆட்களைத்தான் பயன்படுத்த வேண்டும்! ஏனென்றால் இந்த தொழிலை நம்பி ஏகப்பட்ட நபர்கள் டெக்னீசியன்களாவும், உதவியாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் வயிற்றுப்பாடு கழிவது இந்த பணத்தில்தான்! என்பது சினிமா தொழிலாளர் கூட்டமைப்பான பெப்சி போட்டிருக்கும் சட்டம். 

ஆனால் சமீப பல வருடங்களாக ரஜினி, அஜித் போன்ற பெரிய பட்ஜெட் பட ஹீரோக்களின் படங்கள் வெளி மாநிலங்களிலேயே நடத்தப்படுகின்றது. குறிப்பாக ஐதராபாத், மும்பைக்கு போய்விடுகின்றனர் பெரும்பாலும். இதனால் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. வட இந்திய மற்றும் ஆந்திர சினிமா துறை தொழிலாளர்கள், ஜூனியர் ஆர்டிஸ்டுகளுக்குதான் வேலை கிடைக்கிறது. 

இதனால் ‘ரஜினியும், அஜித்தும் தங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள்!’ என்று பகீர் வார்த்தையில் குற்றம் சுமத்துகின்றனர் பெப்சி  உறுப்பினர்கள். 

தற்போது ‘வலிமை’ படத்தின் முதல் ஷெட்யூலை ஐதராபாத்தில் முடித்திருக்கிறார் அஜித். அவரிடம் இந்த பிரச்னையை பெப்சி அமைப்பினர் கொண்டு சென்றனர். யோசித்தவர், அடுத்த ஷெட்யூலின் முக்கிய பாகங்களை சென்னையில்! என்று சொல்லிவிட்டார். ஆனால் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் படமோ ஐதராபாத்தில்தான் போய்க் கொண்டிருக்கிறது. 

கேட்டால் ‘தமிழகத்தில் நடத்தினால் ரசிகர்களின் அன்பு மற்றும் தொல்லை தாங்க முடிவதில்லை.’ என்கிறார்களாம். இதற்கு சுருக்கென பதில் தரும் பெப்சி அமைப்பினர் ‘இன்னைய தேதிக்கு விஜய்க்குதான் ரசிகர் பட்டாளம் அதிகம் இருக்குது. அவரே சென்னை சிட்டியில் நைட் ஷூட்டில் நடிக்கிறார், நெய்வேலியில் போய் நடிக்கிறார். அவங்க ஷூட்டிங்கெல்லாம் நடக்கலையா? சும்மா கதை விடாதீங்க’ என்று சொல்லியிருக்கின்றனர். 

என்ன செய்யப்போகிறார் சூப்பர் ஸ்டார்?