நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா படத்தின் முதல் நாள் வசூல் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ஜூங்கா மற்றும் நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் வசூலை விட அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கதையின் நாயகியாக நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா படம் நல்ல வெற்றி பெற்றது. இதன் பிறகு நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர். ஆனால் நயன்தாராவோ கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தார். அந்தவகையில் அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அறம் திரைப்படம் வெற்றி பெற்றது. 

அறம் படத்தின் 2ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் நயன்தாராவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னரே அப்படத்தின் பாடல்கள் பெறும் வெற்றி பெற்றன. காமெடி நடிகர் யோகி பாபு நயன்தாராவை நினைத்து உருகும் வகையிலான பாடல் யூட்யூபில் டிரன்டானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில் கோலமாவு கோகிலா படமும் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்னங்களே படத்திற்கு கிடைத்தன. நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சனை தொலைபேசியில் அழைத்து பாராட்டும் அளவிற்கு கோலமாவு கோகிலா அசத்தியது. இந்த நிலையில் படத்தின் தமிழ்நாடு முதல் நாள் வசூல் மட்டுமே சுமார் 3 கோடியே 20 லட்சம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது முன்னணியில் உள்ளதாக கூறப்படும் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி ஆகியோரின் படங்கள்கூட தமிழகத்தில் முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்தது இல்லை. விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ஜுங்கா திரைப்படத்தின் முதல் நாள் வசூலை நயன்தாராவின் கோலமாவு கோகிலா முறியடித்தது. மேலும் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் வசூலையும் கோலமாவு கோகிலா முறியடித்தது.

தமிழகத்தில் மட்டுமே 3.2 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள கோலமாவு கோகிலா, தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேலும் வசூல் அதிகரித்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள மற்றொரு படமான இமைக்கா நொடிகள் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது.