கன்னட திரையுலகில் இப்படியொரு பிரம்மாண்டமா? என ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இந்தப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்பட பிரபல கன்னட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். எப்படி தெலுங்கில் வெளியான பாகுபலி திரைப்படம் ஒட்டுமொத்த இந்தியாவையே வியப்பில் ஆழ்த்தியதோடு, பிரபாஸுக்கும் மாஸ் ஓபனிங்காக அமைந்ததோ. அதேபோல் ராக்கிங் ஸ்டார் யஷுக்கு இந்த படம் அமைந்தது.


தற்போது படத்தின் இரண்டாம் பாகத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை போலவே தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான படத்தின் டீசரும் தாறுமாறு வைரலாகி பல்வேறு சாதனைகளை படைத்தது. 

தற்போது படத்தின் டப்பிங் ரைட்ஸ் விற்பனை குறித்து வெளியாகியுள்ள தகவல் திரையுலகையே வாய்பிளக்க வைத்துள்ளது. கடந்த முறை கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் இந்தி டப்பிங் உரிமையை எக்ஸல் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் குறைந்த விலைக்கு கைப்பற்றியது. ஆனால் அதே நிறுவனம் இந்த முறை பல கோடிகளை கொட்டிக் கொடுத்து கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்திற்கான இந்தி டப்பிக் உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தொகை முதல் பாகத்திற்கு கொடுத்த தொகையை விட பல மடங்கு அதிகம் எனக்கூறப்படுகிறது.