கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து நிவாரணம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிவாரண உதவிகளை சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி தன்னார்வல அமைப்புகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் போன்ற அனைவருமே செய்து வருகின்றனர். 

சக மனிதர்களுக்கு உதவிட தங்களால் இயன்ற பொருளுதவி , பண உதவி என செய்து வரும் நம் மக்களின் இந்த மனிதாபிமானம் அனைவரையும் நெகிழச்செய்திருக்கிறது.


 இந்த வெள்ளத்திற்கு பிரபலங்கள் எவ்வளவு நிவாரணத்தொகை அனுப்பி இருக்கின்றனர் என்பது ஊடகங்களில் பரவலாகி இருக்கிறது. இதில் எந்த பிரபலம் எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்பதை வைத்து அவர்களின் ரசிகர்களுக்குள் சண்டை வேறு நடக்கிறது. இதில் நடிகர் விஜய் 70 லட்சம் ரூபாய் நிவாரணத்திற்கு கொடுத்திருக்கிறார். 

மேலும் லாரி நிறைய நிவாரணப்பொருள்களை கேரளாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அஜீத் எந்த மாதிரியான உதவிகளை செய்தார் என்பது இது வரை வெளியே தெரியாது. இதனால் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே கடும் வாக்குவாதங்கள் சமூகவலைதளங்களில் நடந்துவருகிறது. அதே போல ஒவ்வொரு நடிகர் கொடுத்த பண உதவியையும் மற்றொரு நடிகருடன் ஒப்பிட்டு பேசி மீம்ஸ் வேறு வருகிறது. இதனால் கடுப்பான தமிழ்படம் இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது டிவிட்டர் பதிவில் செம டோஸ் கொடுத்திருக்கிறார்.


இது போன்று ஒருவர் செய்த உதவியை மற்றவர் செய்த உதவியுடன் ஒப்பிட்டு பேசி அவர்களை தாழ்த்தும் இந்த கேவலமான செயலை எப்போது தான் விடப்போகிறீர்கள்? எத்தனையோ பேர் வெளியில் தெரியாதபடி தங்கள் உதவிகளை செய்திருக்கின்றனர். நாம் இவ்வாறு பிறரை விமர்சிப்பதை விட்டுவிட்டு நம்மால் ஆன உதவிகளை செய்வோம். ஒவ்வொரு சிறிய தொகையும் கூட உபயோகமானது தான். என அந்த பதிவில் கூறி இருக்கிறார் சி.எஸ்.அமுதன்.