கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக்கியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Keerthy Suresh Revolver Rita Release Date

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ ஆக்ஷன் கலந்த காமெடி படமாகும். இந்த படத்தை ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தை இயக்குனர் ஜே.கே சந்துரு இயக்கியிருக்கிறார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் சார்பில் ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் படத்தை தயாரித்துள்ளன. கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஸ்டன்ட் மாஸ்டர் சுப்பராயன், சென்றாயன் ராதிகா சரத்குமார் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியீடு

படத்தின் டீசரை படக்குழுவினர் கடந்த ஆண்டே வெளியிட்டிருந்தனர். டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், ‘ரிவால்வர் ரீட்டா’ அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழு சார்பில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காமெடி கலந்த ஆக்‌ஷன் படம்

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டீசரின் படி கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தைச் சுற்றி ஒரு மர்மம் நடக்கிறது. அந்த டீசரில் ஒரு கும்பல் கீர்த்தி சுரேஷின் ஹேண்ட் பேக்கை கொள்ளை அடித்து செல்கின்றனர். அதற்குள் ஒரு கையெறி குண்டு, ரிவால்வர், கத்தி போன்ற பயங்கரமான ஆயுதங்கள் இருப்பதை கண்டு அந்த கொள்ளை கும்பல் அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியா? அல்லது டானா? ஒரு ரா ஏஜெண்டா? போன்ற சந்தேகங்கள் எழுகிறது. இந்த படம் கீர்த்தி சுரேஷின் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் என்றும், டார்க் காமெடி ஜானரில் உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷின் புதிய பரிமாணம்

கடந்த ஆண்டு மே மாதத்திலேயே படத்தின் படப்பிடிப்புகள் முடிக்கப்பட்ட போதிலும் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டு சென்றது. இந்த நிலையில் சரியாக ஒரு வருடம் கழித்து வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் கலந்த படமாகவும், அதே சமயம் கீர்த்தி சுரேஷின் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் படமாகவும் ‘ரிவால்வர் ரீட்டா’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…