தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி் வரும் 'பிகில்' படத்தைப் போன்றே இந்தப் படமும் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், 'பிகில்' படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாக ஜடாவை படைத்துள்ளாராம் இயக்குநர் குமரன். 

வட சென்னையில் வசிக்கக் கூடிய இளைஞர்களின் பெருங்கனவுகளில் ஒன்றான கால்பந்தாட்டத்தினை கதையின் களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'ஜடா' படத்தில், திறமை இருந்தும் புறக்கணிக்கப்படும் கால்பந்து வீரராக கதிர் நடித்துள்ளார். 

முக்கியமான கேரக்டரில் யோகிபாபு நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் ஜடா படத்துக்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். 
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'ஜடா' படம் டிசம்பர்  6ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள படக்குழு, தற்போது 'ஜடா 'டிரைலரை வெளியிட்டுள்ளது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


2 நிமிடம் 11 விநாடிகள் ஓடும் இந்த டிரைலர், எதார்த்தமான பக்கா ஸ்போர்ட்ஸ் படம்தான் ஜடா என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது. "இந்த ஊர்ல எதுவும் சரியா படல" என ரவுண்டு கட்டி கதிர் விளையாடியிருக்கும் ஜடா டிரைலர், லட்சக்கணக்கான வியூசை ஈர்த்து வருவதுடன், லைக்சையும் அள்ளி வருகிறது. 

சமூகவலைதளத்தில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள 'ஜடா' டிரைலர், யு-டியூப் டிரெண்டிங்கில் டாப்-5 வீடியோக்கில் ஒன்றாக உள்ளது. டிரைலரைப் பார்த்த நடிகர் சாந்தனு, நடிகை இந்துஜா உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் ஜடாவை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திறமையிருந்தும் புறக்கணிக்கப்படும் ஒரு இளைஞன், அதே விளையாட்டு சூதாட்டத்திற்குள் போய் அடுத்து என்னவாகிறான்? என்ற கதையுடன், இதுவரை நாம் கேள்விப்பட்டிராத 7's கால்பந்தாட்டத்தை காட்டவுள்ள 'ஜடா' படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.