நடிகர் கமல் ஹாசனின் டுவிட்டர் பதிவு குறித்து நடிகை கஸ்தூரி, மண்டை காயுது என கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த விளக்கத்தின்போது, தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது, சிஸ்டம் சரியில்லை என கருத்து தெரிவித்த நடிகர் கமல் ஹாசன் தற்போது அரசியல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளார். கமலின் இந்த பேச்சுக்கு, தமிழக அமைச்சர்கள் கண்டனக் குரல் எழுப்பினர். ஆனாலும், கமலுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுப்பப்பட்டன. 

இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில், தோற்று இருந்தால் நான் போராளி; முடிவெடுத்தால் நானும் முதல்வர்; போடா மூடா என்றாலும் தேடாத பாதைகள் தென்படாது; வாடா தோழா என்னுடன் மூடமை தவிர்க்க எனவும் கமல் பதிவு செய்திருந்தார்.

கமலின் இந்த டுவிட்டர் பதிவு குறித்து, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்டோர், அரசியலுக்கு வர கமல் துடிப்பது ஏன் எனவும், கமல் ஒரு கோழை எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொகுப்பாளர் கமல் ஹாசன் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இது குறித்து நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள் 100 நாட்கள் வீட்டுக் காவலில்தான் உள்ளார்கள். அவர்களை ஏன் கைது செய்ய வேண்டும்? 

முதலில் கலாசார பயங்கரவாதிகளிடம் இருந்துதான், தமிழ்க் கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்து மதம் உங்கள் தனிப்பட்ட சொத்து அல்ல.. வேலி போட்டு பாதுகாக்க என டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், தனது டுவிட்டர் பதிவு குறித்து இன்று விளக்கப்போவதாக கமல் கூறியிருந்தார். இது குறித்து நடிகை கஸ்தூரி, அய்யோ மண்டை காயுதே... இது ஒரு புதிராக உள்ளதே என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.