இது குறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கி வெளிவந்துள்ள ‘அசுரன்’ திரைப்படத்தில் “ஆண்ட பரம்பரை நாங்க தான்.. எங்ககிட்டேருந்து உங்களுக்கு எடம் வந்ததா? இல்லை உங்கக்கிட்டேருந்து எங்களுக்கு எடம் வந்ததா! என்ற வசனம் வருமிடத்தில் எதிர் தரப்பினர் பேசும் உரையாடலில் “எத்தனை நாளாடா சொல்லிக் கிட்டே இருப்பீங்க ஆண்ட பரம்பரைன்னு” என்று முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக உரையாடல் அமைந்திருக்கிறது.

 

இந்த வசனம் எங்களது முக்குலத்தோர் சமுதாயத்தினரை இழிவு படுத்துவது போல இருப்பதாகவும் இதனை நீக்குமாறும் வெற்றிமாறனிடம் கூறியிருந்தேன். என்னுடைய கோரிக்கையை ஏற்று இந்த வசனத்தை நீக்கியதற்கு நன்றி. திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்க வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக இருக்க கூடாது. நமது முகத்தை காட்டும் கண்ணாடி மீது கல் எறிந்தால் கண்ணாடி உடைந்து பலரின் பாதங்களை கிழித்து விடும் ’’ என எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

அசுரன் திரைப்படம் தலித்துகள் பற்றி பெருமை பேசும் வகையில் வெளிவந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சாதிக் கட்சிகள் பாராட்டி வருகின்றன. முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ், இந்தப்படத்தில் தனது மகன் நடித்திருந்தாலும் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஒருதரப்பினரை இழிவுபடுத்தி, மற்றொரு தரப்பினரை போற்றி எடுக்கப்படும் சாதி சம்பந்தப்பட்ட படங்களை எடுப்பவர்கள் மற்றவர்கள் மனதை புண்படுத்தி, இன்னொரு தரப்பினரை ஊக்குவிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தங்கள் இனம் இழிவு படுத்தப்பட்டதை எதிர்க்கும் கருணாஸ் சாதி வெறியரா? அல்லது தன் இனம் கொண்டாடப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சியினர் சாதி வெறியர்களா?