’வரும் நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்கள் தொடர்பாக இதுவரை ஆளுங்கட்சி தர்ப்பிலிருந்து ஒருவர் கூட என்னைத் தொடர்புகொள்ளவில்லை’ என்று பரிதாப ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வான கருணாஸ்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கான பணிகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு என தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தன்னுடன் ஆளும் கட்சி தரப்பில் ஒருவர் கூட பேசாதது வருத்தமளிப்பதாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பொக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ்,’’ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரண் கொண்ட சந்தர்ப்பவாத கூட்டணி, இது அவரின் ஆத்மாவிற்கு விரோதமான செயல். நான் இரட்டை இலையில் நின்று வெற்றிபெற்றிருக்கிறேன். வேறு கட்சிக்கு வாக்கு கேட்டால் என் பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது.

பல்வேறு தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக என்னுடைய சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் இருக்கிறார்கள். அரக்கோணம், ஆரணி, வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஜெயிக்க வைக்கலாமா தோற்கடிக்கலாமா என முடிவு எடுக்கும் நிலையில் என் சமுதாயம் அங்கு இருக்கிறது.  

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக என்னுடன் ஆளும் கட்சி தரப்பில் ஒருவர் கூட  பேசாதது வருத்தமளிக்கிறது. எல்லோரும் என்னை சாதாரணமா நினைக்கிறார்கள். நாங்க புதுசு தான், இப்போது தான் கத்துக்கிட்டு இருக்கோம். ஆனால் எங்க சமுதாய மக்கள் உண்மையிலேயே கோபமாக இருக்கிறார்கள், அதை வெளிப்படையாக சொல்கிறேன். யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.