குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநில மாணவர்கள்,  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டம் தற்போது தமிழகத்திலும் பல்வேறு மாணவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இன்று திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோல் புதுச்சேரியிலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, போராட்டத்தை கலைக்க போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "குடியுரிமை சட்ட திருத்தம் தவறானது. மதச்சார்பின்மைக்கு எதிரானது. இந்தியாவை மதசார்பற்றதாக வைத்திருப்போம். CAA வேண்டாம் என சொல்லுவோம். NRC வேண்டாம். அதேபோல் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதலும் வேண்டாம். 

இந்த பூமி எவனுக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என அதிரடியாக கூறியுள்ளார்".