வந்து ஒருநாள் கூட ஆகல... கைதி 2-வை கேட்கும் ரசிகர்கள்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான "கைதி" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஒரே நாளில் இருவேறு கதாநாயகர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை ஒன்றாக இணைந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் தனிப்பெரும் இடத்தை பிடித்தது. இதனைத் தொடர்ந்து, அவர் இயக்கிய "கைதி" திரைப்படமும் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, புதுமையான பின்னணியில் எடுக்கப்பட்டது. படம் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளதாக சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

'கைதி' படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்தியும், அவரது மகளாக வரும் மோனிகா குட்டியும் நடிப்பில் வெற லெவல் வெறித்தனத்தை காட்டியுள்ளனர். பிகிலைப் போல இந்த படத்திலும் ஒரு சில காட்சிகள் ஹாலிவுட் படங்களின் காப்பி பேஸ்ட் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் பெரும்பாலான காட்சிகளில் லோகேஷ் கனகராஜ் மிரட்டி தள்ளியிருப்பதாக ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இதனிடையே கைதி படத்தின் 2வது பாகத்தையும் விரைந்து இயக்கினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும், டுவிட்டர் மூலம் லோகேஷ் கனகராஜ்க்கு கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர். 

பிளாக்பஸ்டர் வெற்றியால் திக்குமுக்காடி போயிருக்கும் "கைதி" படக்குழு அதன் இரண்டாம் பாகத்தை விரைவில் தயாரிக்குமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, விஜய்யின் "தளபதி 64" படத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பிகில் படத்துடன் கைதி படத்தை நேரடியாக மோதவிட்டு, பிரம்மாண்ட வெற்றி பெற்ற இயக்குநர் என்பதால், "விஜய் 64" படத்திற்கான எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் இப்போதே தொற்றிக்கொண்டது. மேலும் வித்தியாசமான கதைக்களத்தில் புகுந்து விளையாடும் லோகேஷ் கனகராஜ், விஜய்யை புதுமையான கெட்டப்பில் மட்டுமல்லாது, கேரக்டரிலும் திரையில் கொண்டு வர அரும்பாடுபட்டு வருகிறார். <

/p>

 

இந்த நிலையில் தான், கைதி படத்தில் வந்த கார்த்தியோட டில்லி கேரக்டர எங்களால மறக்க முடியல. அதனால கைதி 2 படத்தை எங்க கண்ணுல காட்டுங்கன்னு லோகேஷ் கனகராஜ் டுவிட்டர் பக்கத்தை கோரிக்கையால் நிறைக்க ஆரம்பிச்சி இருக்காங்க ரசிகர்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், "கைதி" படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பிற்கு அளவு கடந்த நன்றி, "கைதி" படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நொடியையும் மிகவும் ரசித்து பணியாற்றினேன், வாய்ப்பளித்த தயாரிப்பாளர் பிரபுவிற்கும், நடிகர் கார்த்திக்கும் நன்றி என பதிலளித்துள்ளார். அதில் அவர் “டில்லி மீண்டும் திரும்ப வருவார்” என கடைசி வரியில் பதிவிட்டுள்ளது, கைதி 2 படத்திற்கான க்ளூவாக அமைச்சிருக்கு. இதனால் "கைதி 2" படத்தை எதிர்பார்த்து நிற்கும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஒருபக்கம் விஜய் ரசிகர்கள், ஒருபக்கம் கார்த்தி ரசிகர்கள் என இருதரப்பினரின் எதிர்பார்ப்பையும் லோகேஷ் கனகராஜ் நிறைவு செய்வாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.