நடிகர் சூர்யாவுக்கும் அவரது தம்பி கார்த்திக்கும் சினிமாவில் இது மிகவும் சோதனையான காலகட்டம் போலிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட கார்த்தியின் புதிய பட ஷூட்டிங்கில் இந்து மதக் கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டதால் அதன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ மூலம் திரையைக் காணவிருக்கும் கார்த்தி அடுத்து நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘கார்த்தி 19’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அந்தப்படத்துக்கு இப்போது ‘சுல்தான்’ என்று பெயரிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதில் கார்த்தி ஜோடியாக, விஜய் படத்தின் நாயகி என்று சொல்லப்பட்ட ‘ராஷ்மிகா மன்டன்னா’ நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தொடங்கி இரண்டு நாட்களே ஆன நிலையில், இது  திப்பு சுல்தான் பற்றிய கதை என்று தகவல்கள் பரவ, இந்து ஆர்வலர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெறுவதை அறிந்த பா.ஜ.க., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்களுடன் மலைக் கோட்டையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.அப்போது சில படப்பிடிப்பு சாதனங்களும் சேதப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மலைக்கோட்டையிலிருந்து குழுவினர் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு இந்து அமைப்பினர் கலைந்து சென்றதால் அப்பகுதியில் நிலவிய பதட்டம் தணிந்தது. இப்படம் திப்பு சுல்தான் பற்றிய கதையாக இருந்தால் அதைப்படமாக்க அனுமதிக்கமாட்டோம். பட ரிலீஸ் வரை தொடர்ந்து டார்ச்சர் செய்வோம். அதனால் படத்தின் இயக்குநரோ, அல்லது கார்த்தியோ படத்தின் கதையை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று எச்சரித்துள்ளனர் பா.ஜ.க.வினர். விட்டா நாங்கதான் சென்சார் பண்ணுவோம் என்று சொன்னாலும் சொல்வார்கள். தலையெழுத்துடா சாமி.