பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் இயக்கத்தில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள ‘மணிகர்னிகா’ படத்தை ரிலீஸுக்கு முன்பு தங்களுக்குப் போட்டுக்காட்டாவிட்டால் பயங்கர விளைவுகளை சந்திக்கநேரிடும்’ என்று மஹாராஷ்டிர கர்னி சேனா அமைப்பு எச்சரித்துள்ளது.

சுதந்திரப்போராட்ட வீராங்கணை ஜான்சி ராணி லக்குமிபாயின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியில் ‘மணிகர்னிகா’ படம் தயாராகியுள்ளது. துவக்கத்தில் ‘என்.டி.ஆர். கதாநாயகடு’ பட இயக்குநர் கிரிஸ் இயக்கிய அப்படத்தை, அவர் கருத்துவேறுபாடு காரணமாக விலகிச்சென்றதால் பின்னர் கங்கனாவே இயக்கி முடித்தார்.

படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முடிந்து வரும் 25ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் படத்தில் ஜான்சி ராணி தவறுதலாக சித்தரிக்கப்பட்டதாகக் கூறி மஹாராஷ்டிர கர்னி சேனா அமைப்பு பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டன. அப்போராட்டங்களை துணிச்சலுடன் எதிர்கொண்ட கங்கனா கர்னி சேனா தொண்டர்கள் பலர் மீது போலீஸ் புகாரும் அளித்தார்.

இந்த பரஸ்பர மோதல்களுடன் படம் ரிலீஸ் தேதியை நெருங்கும் நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய கர்னி சேனா அமைப்பின் தலைவர் அஜய் சிங்,’ கங்கனா எங்களுக்கு படத்தைத் திரையிட்டுக் காட்டாமல் ரிலீஸ் செய்தாரெனில் மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒரு தெருவில் கூட நடமாடமுடியாத அளவுக்கு செய்துவிடுவோம்’ என்று மிரட்டியிருக்கிறார்.