Karnataka against sathiyaraj

2017ஆம் ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று 'பாகுபலி 2' இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாக உள்ளது. 

இந்நிலையில், இப்படத்தை ரிலீஸ் செய்வதில் புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால், கர்நாடகாவில் படத்தை ரிலீஸ் செய்ய தடை கேட்டு கர்நாடக ஆதரவு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 

'பாகுபலி' படத்தின் இரு பாகத்திலும் சத்யராஜ் கட்டப்பா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற கேள்விக்கு அதன் அடுத்த பாகமான `பாகுபலி 2'-ல் தான் விடை இருக்கிறது. 

இந்நிலையில், படத்தில் சத்யராஜ் நடித்திருக்கும் ஒரே காரணத்தால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக எதிர்ப்புக் குழுவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்காக, கர்நாடக திரைப்படக் குழுவின் தலைவர் கோவிந்துவை சந்தித்த அவர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான தண்ணீர் பிரச்சனையின்போது, நடிகர் சத்யராஜ் கர்நாடகத்துக்கு எதிராகப் பேசியதால், சத்யராஜ் மன்னிப்புக் கேட்கும் வரை படத்தை திரையிடக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். 

ஆனால் பாகுபலி முதல் பாகம் வந்தபோது எதிர்க்குரல் எழுப்பாத இவர்கள், இரண்டாம் பாகத்துக்கு மட்டும் ஏன் எதிர்க்குரல் எழுப்புகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இந்தப் படம் வெளிவரும் வேளையில், இந்த விஷயத்தை அரசியலாக்க நினைக்கிறார்கள் என்ற விமர்சனமும் மக்களிடையே எழுந்துள்ளது. 

பாகுபலி முதல் பாகம் வெளிவந்தபோது நடிகர் சுரேஷ், 'இத்தனை திறமையான நடிகர்கள் தெலுங்கில் இருக்கும்போது சத்யராஜ், நாசர் மாதிரியான தமிழ் நடிகர்களை ஏன் ராஜமௌலி பயன்படுத்த வேண்டும்' என்று ட்விட்டரில் சொல்லி பரபரப்பு செய்து, தனது பெயருக்கும் விளம்பரம் தேடிக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.