பேனருக்குப் பதில் விதைப் பந்துகள், மரக் கன்றுகள் ! காப்பான் பட வெளியீட்டில் அசத்திய சூர்யா ரசிகர்கள் !!
நடிகர் சூர்யா நடிப்பில் இன்று வெளியான காப்பான்' பட வெளியீட்டில், பேனர் வைப்பதற்கு பதிலாக சூர்யா ரசிகர்கள் விதைப் பந்துகளையும் மரக்கன்றுகளையும் வழங்கினர். பல இடங்களில் சூர்யா ரசிகர்கள் ஹெல்மெட் வழங்கினர்.
சென்னை பள்ளிக்கரணையில் இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து, தண்ணீர் லாரி ஏறியதில், பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து திமுக, மக்கள் நீதி மய்யம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களுடைய கட்சியினரைக் கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது என கடுமையாக எச்சரித்தனர்..
இந்நிலையில் 'காப்பான்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா "ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இங்கு ஒரு படம் வெளியாகும் போது அதற்கான கொண்டாட்டாம் என கட்-அவுட், பேனர்கள் என வைப்பீர்கள். நமது சமூகத்தில் என்ன நடக்கிறதோ அதற்கு ஏற்றவாறு நமது புரிதலும் இருக்க வேண்டும்.
நமக்கும் மனமாற்றம் வேண்டும். இனி எங்குமே கட்-அவுட், பேனர் வைத்து கொண்டாட்டம் கூடாது. என்னை கட்-அவுட், பேனர் வைத்துதான் சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. நீங்கள் அரசாங்க பள்ளிகளுக்கு செய்யும் உதவிகள், ரத்ததான நிகழ்ச்சிகள் என நடத்துவதே போதுமானது. அது என் பார்வைக்கு வருகிறது" என்று பேசியிருந்தார்.
இதனிடையே இன்று தமிகம் முழுவதும் சூர்யாவின் 'காப்பான்' படம் வெளியானது. அப்போது சூர்யாவின் அறிவுறுத்தலை ஏற்ற விழுப்புரம் ரசிகர்கள் பேனர்கள் எதையும் வைத்துக் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.
அதற்குப் பதிலாக திரையரங்கத்திலேயே விதைப்பந்துகளையும் மரக்கன்றுகளையும் வழங்கி அசத்தினர். 1,000 விதைப்பந்துகளையும் 500 மரக்கன்றுகளையும் படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு வழங்கினர். சேலம், கரூர் போன்ற இடங்களில் ரசிகர்கள் ஹெல்மெட் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.
இதே போல் நெல்லை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் காப்பான் படம் பார்க்க வந்தவர்களுக்கு ரசிகர்கள் இலவசமாக ஹெல்மெட் வழங்கினர். இது பொது மக்களை மிகவும் கவர்ந்தது.