தனது தந்தை உலகக்கோப்பையைத் தட்டித்தூக்கிய கதை படமாகிவரும் ’83 படத்தில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மகள் அமியா உதவி இயக்குனராக பணிபுரிகிறார். இப்படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார்.

பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ். இவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, ’83 என்ற பெயரில் பிரம்மாண்ட பட்ஜெட்டில்  இந்திப் படம் உருவாகி வருகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் அப்போது கேப்டனாக இருந்த கபில்தேவ்-ஆக ரன்வீர் சிங் நடிக்கிறார்.

அந்த அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார். சந்தீப் பட்டீலாக, அவர் மகன் சிரங் நடிக்கிறார். மற்றும் பங்கஜ் திரிபாதி, சஹிப் சலீம், சாஹில் கட்டார், தாஹிர் ராஜ் பாசின் உட்பட பலர் நடிக்கின்றனர். மே மாதம் 15 ஆம் தேதி லண்டனில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. மொத்தம் நூறு நாள் படப்பிடிப்பு நடக்கிறது. இந்தப் படத்தில் கபில்தேவ் மகள் அமியா தேவ் (Amiya) உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்தப் படத்தில் நடிப்பவர்களுக்கு மும்பை கிரிக்கெட் மைதானத்தில், முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பல்விந்தர் சிங் சாந்து பயிற்சி அளித்து வருகிறார். அதை அமியா ஒருங்கிணைத்து வருகிறார்.

இதுபற்றி சந்தீப் பட்டீல் மகன் சிராங் கூறும்போது, ’’எனது தந்தையும் அமியாவின் தந்தையும்  உலகக் கோப்பை போட்டியில் ஒன்றாக விளையாடியவர்கள். இருந்தாலும் பட ஷூட்டிங்கில்தான் அமியாவை சந்தித்தேன். எங்களது தினசரி பயிற்சிகளை ஒருங்கிணைப் பவராக அவர் இருக்கிறார். ஏதாவது மீட்டிங் என்றால் அவர்தான் எங்களுக்கு தகவல் தெரிவிப்பார். ஒரு உதவி இயக்குநராக கபிலின் மகள் காட்டும் ஆர்வமும் சுறுசுறுப்பும் ஆச்சர்யமளிக்கிறது’ என்கிறார்.