கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமலஹாசனுக்கு ஆதரவாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
பற்றி எரியும் கன்னட மொழி சர்ச்சை
‘தக் லைஃப்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமலஹாசன், தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம் எனக் கூறினார். இது கர்நாடகாவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. கன்னட அமைப்புகள் பெங்களூருவில் வைக்கப்பட்டிருந்த ‘தக் லைஃப்’ பட பேனர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பேசிய கமலஹாசன், மொழி வரலாற்று அறிஞர்கள் கூறியதை தான் நான் கூறினேன். என் படத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். மொழி குறித்து பேசுவதற்கு அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியும் இல்லை. நான் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க போவதில்லை எனக் கூறினார்.
கமலை மிரட்டும் கன்னட அமைப்புகள்
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கன்னட மொழிக்கு என்று நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. கமலுக்கு அந்த வரலாறு எதுவும் தெரியவில்லை என விமர்சித்தார். கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது படத்தை தடை செய்வோம் என கர்நாடக அமைச்சர் பேசியிருந்தார். மேலும் கன்னட ரக்ஷின வேதிகே போன்ற அமைப்புகள் கமல் படத்தை தடை செய்வதோடு, போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.
கன்னட சூப்பர் ஸ்டார் கமலுக்கு ஆதரவு
இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார் கமலஹாசனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கமலஹாசனுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள், கன்னட மொழிக்காக என்ன செய்துள்ளீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். சர்ச்சை எழும்போது மட்டுமே குரல் கொடுக்காமல் எப்பொழுதும் கன்னடம் மொழியை ஊக்குவிக்க வேண்டும் என்றும், புதிதாக வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
