தற்போதைய இன்டர்நெட் காலத்தில் ஒரு படம் வெளியாகி ஒரு வாரம் ஓடுவதே மிகப்பெரிய சாதனையாகி விட்டது. அதற்கு காரணம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போதே, ஆன்லைனில் ரிலீஸ் செய்யும் சினிமா பைரசி கும்பலின் வேலை தான். அப்படியிருக்க கன்னட படம் ஒன்று, ஒருமுறையல்ல, இருமுறையல்ல 600 முறைக்கும் மேலாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ம முடியுமா?, ஆனால் நம்புங்கப்பா அந்த அதிசயமும் நடந்து தான் இருக்கு. 

1995ம் ஆண்டு கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரேமா நடிப்பில் வெளியான திரைப்படம் "ஓம்". சாண்டல்வுடின் பவர் புல் ஹீரோவான உபேந்திரா இயக்கத்தில் அதுவரை சாக்லெட் பாயாக நடித்துக் கொண்டிருந்த சிவராஜ் குமார், "ஓம்" படம் மூலம் கேங்ஸ்டராக அவதரித்தார். கன்னட ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் லிஸ்டில் இடம் பிடித்துள்ள "ஓம்" படம் இதுவரை 632 முறை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதைவிட ஆச்சர்யமான செய்தி என்னவென்றால், ஒவ்வொரு முறையும் தியேட்டர் ஹவுஸ் ஃபுல் ஆனது தான்.

இதுவரை கன்னட திரையுலகில் யாரும் தொட முடியாத அளவிற்கு வசூல் சாதனை படைத்துள்ள அப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ், 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2015ம் ஆண்டு தான் விற்கப்பட்டது. 'எங்களுக்கு கொடுங்க', 'எனக்கு தாங்க' என பல நிறுவனங்கள் சண்டை போட்ட போதும் விற்கப்படாத சாட்டிலைட் உரிமையை, பிரபல கன்னட சேனல் ஒன்று 10 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது. 20 வருடம் பழைய படம் ஒன்றிற்கு இவ்வளவு தொகை கொடுக்கப்பட்டுள்ளது, இதுவே முதல் முறையாகும்.

கோவில் பூசாரி மகன் சத்யா, காதலால் வாழ்க்கையே மாறிப்போய் எப்படி ரவுடியாக மாறுகிறார் என்பதே ஓம் படத்தின் கதை. இப்போது பார்க்க ரொம்ப சாதாரணமாக தெரியும் இந்த கதை, கேங்ஸ்டர் கதைகளுக்கு எல்லாம் முன்னோடி என்பதால் சக்கப்போடு போட்டது. 20 ஆண்டுகள் பழமையான ஒரு படம் அடுத்தடுத்து சாதனைகளை செய்து வருவது என்பது நம்ம சூப்பர் ஸ்டார் படத்தில் கூட கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.