இந்தியில் மூன்றாவது வாரமாக வசூலில் சக்கைப் போடுபோட்டுக்கொண்டிருக்கும் ‘மணிகர்னிகா’ படத்தின் கதாநாயகியும் இயக்குநருமான கங்கனா ரனாவத் அடுத்து தனது சொந்தக் கதையைத் தானே  இயக்கி,தயாரித்து, நடிக்கவிருக்கிறார். இப்படத்துக்காக கதை, திரைக்கதையை இந்திய சினிமாவின் டாப் டென் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமவுலியின் தந்தை எழுதுகிறார் என்பது கூடுதல் செய்தி.

சுதந்திரப்போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் வாழ்வில் நடந்த துணிச்சலான சம்பவங்களை மய்யமாகக் கொண்டு ‘மணிகர்னிகா’ படத்தை கங்கனா ரனாவத் இயக்கியிருந்தார். அப்படம் மூன்றாவது வாரத்தில் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து கங்கனாவை இந்தி சினிமா இயக்குநர்களின் முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் கொண்டுவந்து சேர்த்துள்ளது.

இந்நிலையில் படத்தின் வெற்றிக்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக கங்கனாவைத் தொடர்புகொண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையும் ‘பாகுபலி’,’மணிகர்னிகா’ படங்களின் கதாசிரியருமான கே.வி.விஜயேந்திரா தான் ஏற்கனவே சொன்னதுபோல் கங்கனாவின் சொந்தக் கதையை திரைப்படத்துக்கு எழுதித்தர தயாராக இருப்பதாகவும், கங்கனா தனது அடுத்த படமாக அதையே இயக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.

அதற்கு முதலில் சிறிது தயக்கத்துடன் சம்மதம் தெரிவித்த கங்கனா, தற்போது மிக உறுதியாக தனது சொந்தக்கதையை இயக்குவது என்று முடிவுக்கு வந்துவிட்டாராம். ’எனது கதையை படமாக்கலாம் என்று விஜயேந்திரா சொன்னபோது தயக்கமாக இருந்தது. பின்னர் சிறிய திரைக்கதை வடிவில் அவர் அதை விவரித்தபோது வியப்பின் எல்லைக்கே போய்விட்டேன். எந்த ஒரு பின்னணியும், வழிகாட்டுதலும் இல்லாமல் பாலிவுட்டில் இவ்வளவு பெரிய இடத்துக்கு நான் வந்திருக்கும் கதை சொல்லப்படவேண்டிய ஒன்றுதான் என்று உணர்ந்தே இதைப் படமாக்க துணிந்திருக்கிறேன்.

என் வளர்ச்சியில் லட்சக்கணக்கான மக்களின் அன்பு இருக்கிறது. சில வேண்டாத மனிதர்களின் விஷமத்தனங்களையும் சந்தித்திருக்கிறேன். அந்தக் கருப்பு மனிதர்களின் பெயர்களெல்லாம் வெளியிடப்படமாட்டாது’ என்கிறார் கங்கனா.