நடிகர் ராகவா லாரன்ஸின் அரவணைப்பில் மிகவும் பத்திரமாக இருப்பதாகவும் தனக்கு எந்த ஃபோட்டோகிராபரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்றும் காஞ்சனா 3’ படத்தின் நாயகிகளுல் ஒருவரான அலெக்ஸாண்ட்ரா கூறியுள்ளார்.

‘காஞ்சனா 3’ படம் ரிலீஸான ஓரிரு தினங்களில் அப்படத்தின் நாயகியான அலெக்ஸாண்ட்ரா நடிகர் ரூபேஷ் குமார் என்பவர் விளம்பர படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி தன்னை புகைப்படம் எடுத்ததாகவும் பின்னர் அதை மார்பிங் செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பி தன் விருப்பப்படி நடந்துகொள். இல்லாவிட்டால் இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாகவும் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இச்செய்திகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முற்றிலும் மறுத்துள்ள அவர்,’கண் மூடித் திறப்பதற்குள் என்னைப்பற்றி எவ்வளவு செய்திகள். நான் போட்டோ செஷன் எதிலும் ஈடுபடவும் இல்லை. யாரும் என்னை மிரட்டவும் இல்லை. அதையும் தாண்டி எனக்கு ஒரு குழந்தை உள்ளதாகவும் எழுதி உள்ளனர். எனக்கு 22 வயதுதான் ஆகிறது இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. இயக்குநர் ராகவா லாரன்ஸின் பாதுகாப்பில் நான் மிகவும் பாதுகாப்பாகவே உள்ளேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.