மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 3-வது படத்திலேயே விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா தாக்கம் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில், திரையரங்குகள் திறக்க பட்டதும், மாஸ்டர் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், மாஸ்டர் படத்தின் டீசர், ட்ரைலர் போன்றவை தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார் லோகேஷ் கனகராஜ்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து, கமலஹாசனை வைத்து இயக்க உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவித்தார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'விக்ரம்' என வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாள் ட்ரீட்டாக, விக்ரம் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அனைத்து அசைவ உணவுகளையும் வைத்து டீசரை பார்க்க வைத்தே வித்தியாசமாக ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து விட்டார் கமல். அதே போல் கர்ஜனை குரலில் ஆரம்பிக்கலாமா என மிரட்டி, இரு கோடரிகளை தூக்கி எறிவது போன்று இந்த டீசரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் பல ரக துப்பாக்கிகளில் கமல் தோட்டக்கலை லோடு செய்வது, அவற்றை மறைத்து வைப்பது என கெத்து காட்டியுள்ளார். இந்த படம் அரசியல் நிறைத்த படம் என கூறப்பட்டு வரும் நிலையில், வன்முறை காட்சிகளும் கூடுதலாக இருக்குமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த டீசர்.

அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படம் 2021-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.