நீங்க செய்றது கொஞ்சம் கூட சரியில்ல, ஒரு படத்தை வைத்து மீண்டும் பிரச்சனை செய்வது ஜனநாயகம் இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு அரசியல் கட்சியின் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. படத்தில் சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினர் மதுரை மற்றும் கோவையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சா்ச்சைக்குரிய காட்சியை படத்தில் இருந்து நீக்குவதாக படக்குழு தொிவித்தது. இதனைத் தொடா்ந்து படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு திரைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யக் கூடும் என்பதால் இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடா்ந்தார்.

அதன்படி அவரை இன்று வரை (நவம்பர் 27ம் தேதி) வரை கைது செய்யக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடா்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில், அரசின் நலத்திட்டங்களையும், அரசையும் விமா்சிக்க மாட்டேன் என்று இயக்குநா் முருகதாஸ் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். 

மேலும் அரசின் திட்டங்களை விமா்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.  இந்த நிலையில், இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்ட சர்கார் படத்தை வைத்து பாசிசம் செய்ய தமிழக அரசு முயற்சிக்கிறது. இது ஜனநாயகம் இல்லை. ஏற்கனவே தமிழக அரசின் பாசிசம் முறியடிக்கப்பட்ட நிலையில், அதனை மீண்டும் முயற்சிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.