Mayilsamy : மயில்சாமி மாதிரி ஒரு வள்ளலை பார்க்கவே முடியாது... கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்த திரைப்பிரபலங்கள்
நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மயில்சாமியின் மறைவுக்கு அவருடன் சினிமாவில் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பு பின்வருமாறு.
நடிகர் மயில்சாமியின் மறைவு குறித்து நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான மனோபாலா கூறியதாவது : “சென்னையில் மழை வெள்ளம், புயல் வந்துவிட்டால் போது உதவி செய்ய படகை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். மயில்சாமி மாதிரி ஒரு வள்ளலை பார்க்க முடியாது. இதற்கெல்லாம் பணம் அதிகம் செலவாகுமே என்று சொன்னால்.. என்ன கொண்டு வந்தோம், என்ன கொண்டு போகப்போகிறோம் எனக் கூறுவார் மயில்சாமி. திரைத்துறையினர் தொடர்ந்து மறைந்து வருவது மிகவும் வருத்தமளிக்கிறது” என மனோபாலா வேதையுடன் கூறினார்.
அதேபோல் மயில்சாமியின் மறைவுக்கு நகைச்சுவை நடிகர் யோகிபாபு இரங்கல் தெரிவித்து பேசுகையில், சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் இருந்தே மயில்சாமி அண்ணனை எனக்கு தெரியும். நிறைய பேருக்கு அண்ணன் உதவி இருக்கிறார். அண்ணனின் மறைவு மிகப்பெரிய இழப்பு” என தெரிவித்துள்ளார்.
பல்வேறு படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் சார்லியும் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நானும் மயில்சாமியும் முதல் சந்திப்பிலேயே நண்பர்கள் ஆகிவிட்டோர். தீவிர சிவபக்தரான மயில்சாமி, சிவராத்திரி அன்றே மறைந்துவிட்டார். அவரது இழப்பு என்றும் ஈடு செய்ய முடியாத இழப்பு.” என சார்லி தெரிவித்துள்ளார்.
மயில்சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சரத்குமார் பதிவிட்டுள்ளதாவது : “எனது அன்பு நண்பரும், மிகச்சிறந்த மனிதரும், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும், சிறந்த விரிவுரையாளருமான அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது. அன்பு நண்பர் மயில்சாமி அவர்களை பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலைத்துறையினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசன், மயில்சாமியில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது : “நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார்.
மயில்சாமி உடன் தூள், தில் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் விக்ரம், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “உங்களின் நகைச்சுவைகள் என்றென்றும் நினைவுகூரப்படும்” என பதிவிட்டுள்ளார்.
இதுதவிர நடிகை சாக்ஷி அகர்வால், ராதிகா சரத்குமார், நடிகர் அருண்விஜய் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு உள்ளனர்.