Vikram movie release date : விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று, இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
குறும்படம் மூலம் அறிமுகம்
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அவியல் என்கிற ஆந்தாலஜி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்ற காலம் என்கிற குறும்படத்தை அவர் இயக்கி இருந்தார். இதையடுத்து சந்தீப் கிஷான் நடிப்பில் கடந்த 2018-ல் வெளியான மாநகரம் படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
பாப்புலர் ஆக்கிய கைதி
இதையடுத்து நடிகர் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கைதி படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைத்து மாஸ் வெற்றியை ருசித்தார் லோகேஷ்.

மாஸ்டரால் உயர்ந்த மார்க்கெட்
மாஸ்டர் படத்துக்கு பின் லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்தது. கோலிவுட்டில் அவருக்கு டிமாண்டும் அதிகரித்தது. இதையடுத்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார் லோகேஷ். கமலின் வெறித்தனமான ரசிகரான லோகேஷ் அவருடனே கூட்டணி அமைத்துள்ளதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
கமலுடன் கூட்டணி
விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது. விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விக்ரம் ரிலீஸ் தேதி
இந்நிலையில், விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று, இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்ரம் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... The Kashmir Files : காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்து மெர்சலான பிரதமர் மோடி - படக்குழுவை நேரில் பாராட்டினார்

