உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தால் அவர்களின் இறுதிச் சடங்குகளை இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்கிற அரசின் அறிவிப்பை கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

விபத்தில் சிக்கியோ அல்லது மூளைச்சாவு அடைந்த நிலையில் இருப்பவர்கள், உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தால் அவர்களின் இறுதிச் சடங்குகளை இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ள உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பால் உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது அதுமட்டுமின்றி பொதுமக்களிடம் உறுப்பு தானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் இந்த மகத்தான அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தற்போது முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம். இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... இதைவிட சிறப்பான மரியாதையை யாராலும் அளிக்க முடியாது; ஸ்டாலினுக்கு அன்புமணி பாராட்டு