மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன், நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி உள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் 100 நாட்களில் ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்கள் மட்டும் கமல்ஹாசன் கலந்துகொள்வார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் நடந்த போட்டிகள் மற்றும் சண்டைகள் குறித்து போட்டியாளர்களுடன் அகம் டிவி வழியே கலந்துரையாடுவார். இறுதியாக மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகள் பெற்ற நபரை அறிவிக்கும் பொறுப்பையும் கமல் மேற்கொண்டு வந்தார்.

அந்த வகையில் கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் கமல்ஹாசன். இதற்குபின் அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கமல்.

மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை மற்றும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் என அவர் இதிலிருந்து மீண்டு வர மொத்தம் 14 நாட்கள் ஆகும். இதனால் அவர் 2 வாரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக ஸ்ருதிஹாசன் அல்லது விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாகவும் கடந்த இரு தினங்களாக வதந்தி பரவி வந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன், நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். வெகு விரைவில் அனைவருடனும் கலந்துரையாட நடிகர் கமல்ஹாசன் ஆவலோடு காத்திருப்பதாகவும் ஸ்ருதி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதைத் தான் அவர் இவ்வாறு சூசகமாக தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்தவாரே வீடியோ கான்பரென்சிங் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொகுத்து வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.