kamal tweet that tamil cinema should be saved from GST
ஜிஎஸ்டி வரியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்ற வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு நடிகர் கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரும் ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. இதில் சினிமாவுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியால் திரையரங்குகளில் டிக்கெட் விலை மிகக் கடுமையாக உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது.
இதனையடுத்து, ஜி.எஸ்.டி வரியால் சினிமா உலகம் பெரிதும் பாதிக்கப்படும் என்று நடிகர் கமல் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், சினிமா மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றும் கமல் தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்ற வேண்டும் என்று டுவிட்டரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு நடிகர் கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Not pressurising. It's a plea & SOS from regional cinema to our FM We fear it will collapse.We request the council to do all to save it.
— Kamal Haasan (@ikamalhaasan) June 5, 2017
இது குறித்து கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இது அழுத்தம் இல்லை என்றும் துன்பத்தில் இருக்கும் பிராந்திய சினிமாவின் கோரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி வரியால் பிராந்திய மொழிப் படங்கள் அழிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், பிராந்திய மொழிப் படங்களை காப்பற்ற ஜிஎஸ்டி கவுன்சில் அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
