’நட்சத்திரக் கலைவிழாக்கள் எதுவும் நடத்தாமல் ஆறே மாதங்களில் நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டி முடிப்போம்’ என்ற எங்கள் அணியின் தேர்தல் வாக்குறிதியை நடிகர் கமல் மிகவும் பாராட்டினார் என்கிறது பாக்யராஜ், ஐசரிகணேஷ் கூட்டணி.இதை ஒட்டி விஷால், நாசர் அணிக்கு தந்திருக்கும் ஆதரவை கமல் வாபஸ் வாங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்கியராஜ், பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசிரி.கணேஷ், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் பிரஷாந்த், நடிகர்கள் நிதின் சத்தியா, ஷ்யாம், ஸ்ரீகாந்த், ரமேஷ் கண்ணா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கமலை  நேரில் சந்தித்து நடிகர் சங்க தேர்தலில் அவருடைய ஆதரவை தங்கள் அணிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், நடிகர் கமலை சந்தித்து எங்கள் அணி சார்பில் என்ன செய்ய போகிறோம் என்று தெரிவித்தோம்.

மேலும் இந்த அணி, அந்த அணி என்பது இல்லை. யாராக இருந்தாலும் கட்டிடம் நல்லபடியாக வர வேண்டும் அது தான் என்னுடைய எண்ணம் என்று கமல் தெரிவித்தார். மேலும் தேர்தலுக்கு என்னை அழைப்பதற்கு பதிலாக கட்டிட திறப்பிற்கு அழையுங்கள் அதுதான் எனக்கு வேண்டும் என கமல் தெரிவித்ததாக பாக்யராஜ் கூறினார்.

அதுமட்டுமின்றி அவரை பொறுத்தவரை நடிகர் சங்க கட்டிடம் நல்லபடியாக வர வேண்டும் என்பது தானே தவிர இவர்கள், அவர்கள் என்று கிடையாது என்றார்.

கடந்த முறையே இந்த கலைநிகழ்ச்சிகள் நடத்தாமல் கட்டிடத்தை கட்டியிருக்கலாமே என்ற கேள்விக்கு, இப்போது தான் சங்கரதாஸ் அணி உருவாகி உள்ளது என்றும் இனிமேல் தான் எங்கள் திட்டங்களை செயல்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்பின் பேசிய ஐசரி கணேஷ் கூறும்போது, நடிகர் கமல் தென்னிந்திய நடிகர் சங்க 

எங்கள் அணி சார்பில் 27 திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை தயார் செய்து கமலிடம் காட்டினோம். அவர் முதல் 5 அறிவிப்பை பார்த்த உடன் ஏற்றுக்கொண்டார்.

* எந்த கலைநிகழ்ச்சிகளும் நடத்தாமல் 6 மாத காலத்திற்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

* எம்.ஜி.ஆர்., சிவாஜி ரேஷன் திட்டம் என்ற பெயரில், ஒவ்வொரு மாதமும் மூத்த கலைஞர்களுக்கு வழங்கும் வகையில் 5 கிலோ ரேஷன் அரிசி, 1 கிலோ பருப்பு வழங்கப்படும்.

* நடிகர் சங்க உறுப்பினர்கள் நலனுக்காக, சங்கமே குடும்ப- சேம நிதியை செலுத்தும்.

* நடிகர் சங்கம் இதுவரை கடைபிடித்து வந்த டோக்கன் சிஸ்டம் ரத்து செய்யப்படும்.

* அதேபோல் மூத்த கலைஞர்கள் நலம் பெற முதியோர் இல்ல திட்டம் சேலம், சென்னை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் உடனடியாக செயல்படுத்தப்படும். இந்த 5 திட்டங்களை பார்த்த உடனே தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் கமல் தெரிவித்ததாக ஐசரி கணேஷ் கூறினார்.